கர்ணனின் முடிவு, நமக்குக் கற்றுக் கொடுக்கும் பாடம்.....

உலக வழக்கப்படிப் பார்த்தால், கர்ணனைப் போரில் அம்பு எய்து கொன்றது அர்ஜுனன் தான். ஆனாலும், போருக்கு முன் கர்ணனுக்கு நடந்த நிகழ்வுகளை ஆராய்ந்து பார்த்தால், ஏற்கனவே பலரால் கர்ணன் சிறிது சிறிதாகக் கொல்லப்பட்டு விட்டான் என்பது விளங்கும். கர்ணனின் இறப்பைப் பற்றிக் கொஞ்சம் விவரமாகப் பார்ப்போம்....

கர்ணன் ஒரு முறை வேட்டையாடச் சென்ற சமயம், தூரத்திலிருந்து வந்த ஒரு சப்தத்தை தவறாக அனுமானித்து, அம்பை எய்ய, ஒரு பிராமணனின் கன்றுக்குட்டி மீது அம்பு பாய்ந்து அது இறந்து விடுகிறது. ஒரு பாவமும் அறியாத கன்றுக்குட்டியைக் கொன்றதால், அந்த பிராமணர் அவனுக்கு ஒரு சாபமிடுகிறார் - அதாவது, கர்ணன் கையறு நிலையில் இருக்கும் போது அவனது இறப்பு நேரிடும்.

பரசுராமரிடம் வித்தை கற்றுக் கொள்வதற்காக அவரது ஆசிரமத்தில் சேரும் பொழுது, தான் ஒரு பிராமணன் என்று பொய் கூறி அங்கு சேர்கிறான். பரசுராமர் பிராமணர் அல்லாதவருக்கு வித்தை கற்றுக் கொடுப்பதில்லை. ஒரு நாள், பரசுராமர், கர்ணனின் தொடையில் தலை வைத்து சின்னத் தூக்கம் போடும் போது, இந்திரன் வண்டு உருவத்தில் வந்து கர்ணனின் தொடையைத் துளைத்து மறுபக்கம் வெளி வரும் போது, கர்ணனின் உடம்பில் இருந்து வெளியேறிய ரத்தம் பரசுராமரை நனைக்கிறது. ஒரு பிராமணனால், இந்த வலியைத் தாங்க முடியாது என்பதை அறிந்த பரசுராமர், கர்ணனுக்கு சாபமிடுகிறார் - அவனுக்கு, உரிய நேரத்தில் அவன் கற்ற வித்தைகள் மறந்து போகும்; பிரம்மாஸ்திரத்தை உபயோகிக்கவும் தெரியாமல் போகும்.

கர்ணனுடைய பலம் அவனோடு ஒட்டிப் பிறந்த கவச குண்டலங்களில் இருப்பதை அறிந்த இந்திரன், ஒரு யாசகன் வேடமிட்டு, அவனிடமிருந்து கவச குண்டலங்களை யாசகம் பெற்றுச் செல்கிறான். சூரிய பகவான் வேண்டாம் என்று தடுத்தும், தனது ஈகைத் தன்மைக்கு பங்கம் விளையாதிருக்க அவ்வாறு செய்கிறான்.

தன்னிடம் இருந்த சக்தி ஆயுதத்தை (அர்ஜுனனைக் கொல்வதற்காக வைத்திருந்தது) கடோத்கஜன் மீது பிரயோகிக்கும் சூழ்நிலை உருவாகிறது. ஆகவே சக்தி ஆயுதம் அவனுக்கு பயனற்றுப் போகிறது. ஏனெனில் அதை ஒரு முறை உபயோகித்த பின், மீண்டும் இந்திரனிடமே போய் சேர்ந்து விடும்.

ஒரு சிறுமி பூமியில் கொட்டிய நெய்யை, கர்ணன், தன் சக்தியை உபயோகித்து, பூமித் தாய்க்கு வலிக்கும்படி நெய்யை பூமியில் இருந்து எடுத்து சிறுமியிடம் கொடுத்ததால், பூமித்தாயின் சாபம் கர்ணனுக்கு நேர்கிறது - யுத்தகளத்தில், அவனது தேர்ச் சக்கரம் இக்கட்டான சூழ்நிலையில் பூமியில் பதிந்து விடுகிறது.

ஆகவே கர்ணன், மேற்கண்ட காரணங்களினால், அநேகமாக ஏற்கனவே இறந்து விடுகிறான். கர்ணனைக் கொல்ல கடைசி ஆயுதமாகப் பயன்பட்டது, அர்ஜுனனின் அம்பு; அவ்வளவுதான்.

அதே போல, ராமருக்கும், ராவணனுக்கும் நடந்த போரில், ராவணன் தனது ஆயுதங்களை இழந்து, சோர்வுற்று இருந்த நிலையில், ராமர், அவனைக் கொல்லாமல், ‘இன்று போய் நாளை வா’ என்று கூற, ராவணன் யுத்த களத்திலிருந்து தனது இருப்பிடத்திற்குச் செல்கிறான். அந்த அவமானம் தாங்காமல், அவன் பாதி உயிர் போனவனாகத்தான் இருக்கிறான். மீதி உயிரைத்தான் ராமர், மறுபடி ராவணன் போருக்கு வந்த போது எடுக்கிறார்.

இது எல்லாம் அநேகமாக நம் எல்லோருக்கும் தெரிந்த கதைதான். இன்று ஒவ்வொரு மனிதனும், ஏதோ ஒரு காரணத்தால் இறக்கிறான். சிலர் மாரடைப்பினால் இறக்கிறார்கள். சிலர் புற்று நோய் வந்து இறக்கிறார்கள். சிலர் சிறுநீரகக் கோளாறினால் இறக்கிறார்கள். சிலர் விபத்துக்களினால் இறக்கிறார்கள். சிலர் அடிதடி சண்டைகளிலும், வேறொருவரால் கொல்லப்பட்டும் இறக்கிறார்கள். ஆனால், இவையெல்லாம் அர்ஜுனனின் அம்பு போலத்தான். ஏற்கனவே மனிதன் பல்வேறு வழிகளில் அநேகமாக இறந்து விடுகிறான் (கடைசியாக இறப்பு வருவதற்கு முன்பே). 

உடல் உழைப்பைக் குறைத்து விட்டோம். பக்கத்தில் இருக்கும் கடைக்குப் போகக் கூட வாகனம் தேவைப்படுகிறது. குப்பை உணவு (junk food) தான் இன்று அநேகமாக எல்லோருக்கும் பிடிக்கிறது. பாரம்பரிய உணவு, சிறுதானியம் ஆகிவற்றைப் பற்றி நிறையப் பேருக்குத் தெரியாது. மாத்திரை, மருந்துகள் தாம் நமது உணவாகி வருகிறது. அவை விளைவிக்கும் பக்கவிளைவுகளைப் பற்றிச் சொல்ல வேண்டியதேயில்லை. நாம் சுவாசிக்கும் காற்று மாசுபட்டுப் போய் விட்டது. குடிப் பழக்கம், புகைப் பழக்கம், போதைப் பொருள் பழக்கம் இவற்றால் சிலரது உடல் உறுப்புகள் கெட்டுப் போய் விடுகின்றன. ரசாயனப் பொருட்களால் செய்யப்பட்ட பலவித அழகு சாதனங்களை உபயோக்கிறோம். அவைகளினால் ஏற்படும் பாதிப்பு நமக்குத் தெரிவதில்லை. உடலுக்குத் தேவையான, அமைதியான ஓய்வைத் தருவதில்லை. மற்றும் வேறு சில கெட்ட பழக்கங்களும் நம்மில் பலருக்கு இருக்கின்றன. இவைகளால் ஏற்கனவே 90% இறந்து விட்ட நம்மை, ஏதோ ஒரு கடைசிக் காரணம் (மாரடைப்பு, விபத்து....) நம்மைக் கொன்றதாகக் காட்டப்படுகிறது. அவ்வளவே.... 

பசியாலும் பட்டினியாலும் வாடி வதங்கி, சாகும் தறுவாயில் இருக்கும் ஒரு மனிதனை, சும்மா ஒரு தட்டு தட்டினாலே இறந்து விடுவான். அந்த மனிதனைத் தட்டியவன் தான் அவனைக் கொன்றான் என்று எப்படிச் சொல்ல முடியும்? 

வாழ்க்கையின் ஒரு பகுதியான இறப்பைப் பற்றிக் கவலைப்பட வேண்டியதில்லை. யாராலும் அதைத் தவிர்க்க முடியாது. ஆனால், நாமாக அதை ஏன் தேடிக் கொள்ள வேண்டும். கணியன் பூங்குன்றனாரின் புறநானூறு செய்யுள் - ‘தீதும் நன்றும் பிறர் தர வாரா’ - ஞாபகம் வருகிறது.

Comments

Popular posts from this blog

மனம் மிக அலை பாயுதே....

No expectation..., no disappointment....

Are we in for a shock...?