குழந்தைகளை கண்டித்து வளர்ப்பதுதான் சரியா....?

சமீபத்தில் வலைத்தளத்தில் வாசித்த செய்தியுடன் ஆரம்பிக்கிறேன். ஒட்டகச்சிவிங்கி (giraffe), தன் குட்டியை ஈனும் போது, நின்று கொண்டுதான் பிரசவிக்குமாம். சுமார் 8 அடி உயரத்திலிருந்து குட்டி கீழே விழுமாம், அப்போதுதான் பிறக்கும் குட்டிக்கு அடி பட்டு நன்றாக வலிக்கும், இல்லையா? சிறிது நேரம் தாய் ஒட்டகச்சிவிங்கி தன் குட்டியின் பிரசவ ஈரத்தை நாக்கால் நக்கி கொஞ்சுமாம். பின்னர், தனது காலால், குட்டியை எட்டி உதைக்குமாம். குட்டி தூரத்தில் சென்று விழுமாம். வலியுடன், தட்டுத்தடுமாறி எழுந்திருக்க முயலும் குட்டியை, தாய் மறுபடியும் மறுபடியும் காலால் உதைக்குமாம். சில பல முயற்சிக்குப் பின், குட்டி, தனது கால்களினால் எழுந்து நின்று, நடக்க ஆரம்பிக்குமாம்; பின்னர் ஓடவும் பழகுமாம்.

ஏன் அப்படி தாய் ஒட்டகச்சிவிங்கி செய்கிறது. குட்டி பாவமில்லையா என்று நாம் நினைக்கலாம். தனது குட்டியை கூடிய சீக்கிரம் நடக்கவும் ஓடவும் பழக்கப்படுத்துவதற்காகவே அப்படிச் செய்கிறதாம் தாய். அதற்குக் காரணம், வனத்தில் இருக்கும் சிங்கம், புலி, ஓநாய் இவைகளுக்கு குட்டி ஒட்டகச்சிவிங்கியின் மாமிசம் மிகவும் ருசியாக இருக்குமாம்!. அந்த மிருகங்களிடமிருந்து தனது குட்டியைக் காப்பாற்றுவதற்காகவே இந்தப் பயிற்சி.

மற்றொரு வலைத்தள காணொளி (video). ஒரு ஏழை மாணவன், தன் தாயிடம் இரு சக்கர வாகனம் கேட்கிறான். சாப்பாட்டுக்கே வழியில்லாத தாயால் என்ன செய்ய முடியும்? எவ்வளவு கூறியும் அடம் பிடிக்கிறான் அந்த மாணவன். அவனது உறவினர் ஒருவர் அங்கு வருகிறார். அந்த சூழ்நிலையை உள்வாங்கிக் கொண்டு அந்த உறவினர், அந்த மாணவனிடம் ஒரு தாளைக் கொடுத்து, ஒரு இலக்கை நோக்கி வீசச் சொல்கிறார். அது அங்கும் இங்கும் பறந்து எங்கோ செல்கிறது. பின்னர் அந்தத் தாளை நன்றாகக் கசிக்கி, பந்து போலாக்கி எறியச் சொல்கிறார். அது இலக்கில் சென்று விழுகிறது. ஒரு தாளையே இலக்கை அடையச் செய்ய அதைக் கசக்கி எறிய வேண்டியிருக்கிறது; அது போல, ஒரு இலக்கை அடைய பல துன்பங்களை அனுபவிக்க வேண்டியதிருக்கும் என்று விளக்கம் கூறுகிறார்.

எப்போதோ ஒரு சொற்பொழிவில் கேட்டது. ஒரு குழந்தைக்கு நன்றாக ஜலதோஷம் பிடித்திருக்கிறது. குழந்தைக்கு பனிக்கூழ் (ice cream) என்றால் மிகவும் பிடிக்கும். அம்மாவிடம் வாங்கித் தரச் சொல்லி அழுகிறது. கண்டிப்பாக மறுத்து விடுகிறாள் அந்தக் குழந்தையின் அம்மா. பொறாமை பிடித்த பக்கத்து வீட்டு அம்மாவிடம் ice cream வாங்கித் தரச் சொல்லிக் கேட்டவுடன் (குழந்தைக்கு ஜலதோஷம் என்று தெரிந்தும்), குழந்தைக்குக் கேட்ட பொருள் கிடைத்து விடுகிறது. இதில், யாருக்கு குழந்தை மேல் பிரியம் அதிகம்? கேட்டவுடன் ice cream வாங்கித் தந்த பக்கத்து வீட்டு அம்மாவா, தனது சொந்த அம்மாவா?

அந்தக் காலங்களில், தனது பிள்ளையை பள்ளியில் சேர்க்கச் செல்லும் போது, அம்மாவோ, அப்பாவோ, ஆசிரியரிடம், ‘சேட்டை செய்தாலோ, நன்றாகப் படிக்கவில்லையென்றாலோ, கண்ணை மட்டும் விட்டு விட்டு, தோலை உரிச்சிருங்க’ என்று சொல்வார்கள். இதன் அர்த்தம், தனது பிள்ளையைக் கண்டிப்பதால், தண்டிப்பதால் அவன் நல்ல ஒழுக்கமுள்ள மாணவனாக ஆக வேண்டும் என்ற நல்ல எண்ணத்தினால்தானே....

மற்றொரு கதை. ஒரு கல்லாலான படிக்கட்டு, ஒரு சிற்பத்தைப் பார்த்துக் கேட்டதாம், ‘நீயும் கல்தான், நானும் கல்தான். உன்னை எல்லோரும் பார்த்து ரசிக்கிறார்கள்; ஆனால், என்னை எல்லோரும் மிதித்துச் செல்கிறார்களே’. அதற்கு அந்தச் சிற்பத்தின் பதில், ‘வடிவமில்லாத கல்லான என்னை உளி கொண்டு, என்னிடமிருந்த தவறுகளை (தேவையில்லாத பகுதி) நீக்கியதால்தான் எனக்கு இந்தப் பெருமை’. அது மாதிரி, மனிதனும், தனது தவறுகளைச் சரி செய்ய, கண்டிப்புடன் வளர்க்கப்பட வேண்டும்.

தங்கம் ‘புடம்’ போடப்படுவதால்தான் (நெருப்பில் சுடும் செயல்முறை) சுத்தமாகிறது. 

மேலே கூறிய அனைத்துமே இந்தக் காலத்துப் பிள்ளைகளுக்குப் பொருந்தாமல் பெற்றோர்கள் வளர்க்கிறார்கள். அவர்களுக்கு அதீதமாக (தேவைக்கு அதிகமாக) செல்லம் கொடுக்கிறார்கள். அதன் விளைவு பிற்காலத்தில் தனது பிள்ளையின் செயலில் எதிரொலிக்கும். இன்று குடும்பத்தில், ஒரு பிள்ளை, இரண்டு பிள்ளை என்று ஆனதினால், கண்டிப்பு மிக மிகக் குறைந்து விட்டது. அவர்களிடம் அன்பு காட்ட வேண்டும்; அரவணைக்க வேண்டும். ஆனாலும், கூடிய வரையில் குழந்தைகளின் தவறுகளைச் சுட்டிக் காட்டி, அவர்களை சரியான கண்டிப்போடு வளர்க்க வேண்டும். அப்போதுதான் நம் பிள்ளை ’பேர் சொல்லும் பிள்ளை’யாக வளரும்.

Comments

Popular posts from this blog

மனம் மிக அலை பாயுதே....

Mental Ability..... are we slowly losing....?

Is it humanly possible....?