கடவுளைத் தேடுகிறேன்....
கடவுள்
ஒரு முறை ஆழ்ந்த சிந்தனையில்
இருந்த போது, அங்கு நாரதர் வந்தார்…. நாரதர் வந்தது கூடத் தெரியாமல் கடவுள் யோசனையில் இருப்பதைப் பார்த்து…. ‘ஹ்கு..கும்’ என்று கனைத்து தன் வரவைத் தெரிவித்தார்
நாரதர்…. கடவுளோ, சுற்றி நடப்பது எதையும் அறியாதவராக தன் யோசனையைத் தொடர்ந்தார்.
’கடவுளே…,
மன்னிக்கவும்…. நான் வந்தது கூடத்
தெரியாமல் அப்படியென்ன பலத்த யோசனை…. என்னிடம் சொன்னால்…, நான் ஏதாவது சொல்ல
முடியுமா என்று பார்க்கிறேன்’ என்றார் நாரதர்.
’ஓ!
நீயா…. வா…. வந்து உட்கார்’
என்று சொன்ன கடவுள், ‘நாரதரே, எனக்கு ஒரு சந்தேகம். ஆறறிவுள்ள
மனிதனைப் படைக்கும் போது, ‘வெட்கம்’…, ‘கோபம்’…, ‘கருணை’…, ‘பயம்’…, ‘அறிவு’…., ’அறியாமை’…, என்று எல்லா குணங்களையும் வைத்தேன். ‘ஆசை’ என்ற குணத்தை
வைக்கும் போது, கொஞ்சம் தயங்கத்தான் செய்தேன். ‘திருப்தி’யை வைத்து விட்டால்,
மனிதன் ஆசைகள் நிறைவேறியதும், ‘திருப்தி’ அடைந்து விடுவான் என்று நினைத்தேன். ஆனால், மனிதனின் பிரச்னைகள் தீராமல், எல்லோரும் மனக்குறைவாகவே இருக்கிறார்களே…. ஏதாவது செய்யணுமே என்றுதான் யோசித்துக் கொண்டிருக்கிறேன்’.
நாரதர்
: இறைவா! பரம்பொருளே…., ‘ஆசை’ என்ற குணத்தை
வச்சுட்டீங்கல்ல…. அப்புறம் எப்படி ‘திருப்தி’ எட்டிப் பார்க்கும்! கடவுளே…, ‘ஆசை’, திருப்தியை easy-யா அடக்கிடும்… மனிதனின்
பிரச்னை, மனிதன் இருக்கும் வரை எப்படி தீரும்….
இதை அறியாதவரா நீங்கள்….
கடவுள்
: இல்லை நாரதா… நான் ஏதாவது செய்யணும்….
செய்யப் போகிறேன்… இப்படியே போனால்…, மனிதனுக்கு திருப்தியே வராது போல இருக்கே….
நாரதர்
: கடவுளே… நீங்கள் நினைச்சு ஒரு காரியத்தில் இறங்கினால்
அதை யாரால் தடுக்க முடியும். இருந்தாலும், ஆசைக்கு அளவு என்பதே கிடையாது;
மனிதனைத் திருப்திப்படுத்தவே முடியாது. சரி…. நீங்கள் என்ன செய்யப் போகிறீர்கள்
என்பதை அடியேன் தெரிந்து கொள்ளலாமா….
கடவுள்
: அவசரப்படாதே நாரதரே… வந்து சொல்கிறேன் –
என்று
சொல்லிக் கொண்டே மறைந்து போனார். கடவுளோ, மனிதர்கள் யார் எது கேட்டாலும்
கொடுத்து, அவர்கள் திருப்தியடைவதைப் பார்க்க வேண்டும் என்று பூமிக்கு வந்தார்…..
மக்கள்
பரபரப்பாக இயங்கிக் கொண்டிருக்கும் பகுதியில், அவர்கள் மத்தியில், ‘நான் கடவுள் வந்திருக்கிறேன்….
உங்களுக்குத் தேவையானதைக் கேளுங்கள், தருகிறேன்’ என்று சொன்னதைக் கூட கவனிக்காமல் மக்கள்
அவர்கள் பாட்டுக்கு தங்கள் தங்கள் வேலைகளில் கவனமாகச் சென்று கொண்டிருந்தார்கள். இந்த மக்களிடம் அசாதாரணமான
காட்சியைக் காண்பித்துத்தான், அவர்களைத் தன் பக்கம் திருப்ப
வேண்டும் என்று தீர்மானித்த கடவுள், தன் உருவத்தைப் பெரிதாக
வளர்த்து…, சங்கு…, சக்ராயுதத்துடன் காட்சி தந்தார்….. இதைப் பார்த்த மக்கள்…, ‘ஆஹா…, சாட்சாத் கடவுளே நம்மைத் தேடி வந்திருக்கிறாரா…., அதுவும் நமக்குத்
தேவையானதைக் கொடுக்கப் போகிறாரா…. இன்றே நமக்குத் தேவையானதை எல்லாம் கேட்டு வாங்கிக் கொள்ள வேண்டும் என்ற தீர்மானத்துடன் ஆளாளுக்கு
முண்டியடித்து முன்வரிசையில் வருவதற்கு போட்டி போட்டுக் கொண்டிருந்தார்கள். கூட்டத்தில் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. கடவுளே நிற்க முடியாமல் தடுமாறிப் போனார்.
மக்களைப்
பார்த்து, ‘பிள்ளைகளே, உங்களுடைய பிரச்னையைத் தீர்த்து வைக்கவே நான் இங்கு வந்திருக்கிறேன்.
ஒவ்வொருவராக என் முன்னே வந்து,
உங்களுக்குத் தேவையானதைக் கேட்கலாம்…. ஒருவர், ஒரு முறை, ஒரு
விஷயத்தை மட்டுமே கேட்கலாம்… இன்னும் ஏதாவது கேட்க வேண்டும் என்றால், மறுபடியும் வரிசையில் நின்றுதான் வர வேண்டும் என்று
தன்னுடைய நிபந்தனையைக் கூறினார்.
மக்களும்
ஒருவித பரபரப்புடன் என்னென்ன கேட்கலாம் என்று மனதுக்குள் ஒரு கணக்கு போட்டுக்
கொண்டு, வரிசையில், நீ முந்தி, நான்
முந்தி என்று இடம் பிடிக்கப் போராடினார்கள்.
முதலில் நின்றவன், ‘கடவுளே எனக்கு ஒரு பங்களா வேண்டும்’
என்றான். ‘தந்தேன்’ என்றார் கடவுள். பின்னால் வந்தவன், ‘போர்டிகோவில் கார் நிற்கும் பங்களா
வேண்டும்’ என்றான். இப்படி ஒவ்வொருவராக, தனக்கு முதலில் தோன்றியதை கேட்டவர்கள், தனக்குப் பின்னால் வந்தவன் கேட்டதைப் பார்த்து, ‘ஐயோ நாம் இதைக்
கேட்க மறந்து விட்டோமே’ என நினைத்து, ஓடிச்
சென்று வரிசையின் பின்னால் போய் நின்று கொண்டான்.
இப்படியாக ஒவ்வொரு மனிதனும், தான் கேட்க மறந்ததைக்
கேட்பதற்காக மறுபடியும் மறுபடியும் வரிசையில் நின்றான்.
ஒவ்வொருவரும்
100 முறை வந்து பின்னும் களைப்பேயில்லாமல், ஒரு முறைக்கு ஒன்றுதான்
கேட்க வேண்டும் என்றாலும், உற்சாகமாக மறுபடியும் மறுபடியும் கடவுள் முன் நின்றார்கள். கடவுளுக்கோ,
கொடுத்து கொடுத்து கைதான் சிவந்து போனது. கடவுள் tired ஆகி விட்டார். மனிதனின்
மனதில் ‘திருப்தி’யே வரவில்லை…. மக்கள்
உழைக்க மறந்தார்கள்…, பசி மறந்தார்கள்…, தூங்க
மறந்தார்கள்…, இடை விடாமல் கடவுளைத்
தொந்தரவு பண்ண மட்டும் மறக்கவும்
இல்லை…, தயங்கவும் இல்லை. கடவுள் பார்த்தார்; ‘என்னடா…, நமக்கு rest கொடுக்காமல், மனுஷங்க இப்படி தொந்தரவு பண்றாங்களே…. நாம இவங்களுக்கு ரொம்ப
இடம் கொடுத்துட்டோமோ…, ஏதாவது செய்யணுமே…’ என்று மனதில் நாரதரை நினைத்தார். நாரதரும், கடவுளின் கஷ்டம் புரிந்து, யார் கண்ணுக்கும் தென்படாமல்,
அங்கு வந்து நின்றார். கடவுள் படும் அவஸ்தையைப் பார்த்து நிலமையைப் புரிந்து கொண்டார்.
‘நான்
தான் சொன்னேன்ல…, மனிதனைத் திருப்திப்படுத்த முடியாது என்று’… இப்ப எல்லாம் கை
மீறிப் போச்சு… நிலமையைச் சமாளிக்க இங்கிருந்து escape ஆயிருங்க கடவுளே’ என்றார். கடவுளும், மனிதனிடமிருந்து தப்பிக்க, கடலுக்கடியில் போய் ஒளிந்து கொண்டார்.
மனுஷன்னா சும்மாவா…. கடலுக்கடியில் கடவுளைத் தேடிச் சென்று, தனக்கு வேண்டியதைத் தருமாறு கேட்டான். கடவுள், ஒரு மரத்தின் வேருக்கடியில்
போய் ஒளிந்து கொள்ள, மனிதன் மரத்தையே பெயர்த்து எடுத்து, கடவுளிடம் வேண்டியதைக் கேட்டான். இப்படியாக, எங்கு சென்றாலும், மனிதன் துரத்தித் துரத்தி தொந்தரவு பண்ணவும், நாரதரிடம், ‘Please help me, நாரதா…, மனிதனுடைய ஆசைக்கு முடிவே இல்லாமல் போச்சு. அவனுக்கு திருப்தி வரவே வராது போல.
மனிதன் வர முடியாத இடத்திற்குச்
சென்று ஒளிந்து கொண்டாலும், அங்கும் என்னைத் தேடி வந்து விடுகிறான்.
இப்ப நான் என்ன செய்ய….’
என்று கேட்டார்.
நாரதரும்,
‘கடவுளே! ஆபத்துக்குப் பாவமில்லை. மனிதன் எங்கு வரவே மாட்டானோ, எந்த
இடத்தை நினைத்தே பார்க்க மாட்டானோ…, அங்கு போய் ஒளிந்து கொள்ளுங்கள்.
நீங்கள் நிம்மதியாக இருப்பீர்கள்’ என்று சொல்லவும்…, கடவுள் யோசித்தார்…. உடனே, கடவுள் ஒவ்வொரு மனிதனின் மனத்திலும் போய் ஒளிந்து கொண்டு
நிம்மதியாகத் தூங்கியும் போய் விட்டார். அந்தோ
பாவம்…. இன்று வரை, தன் மனதில்
இருக்கும் கடவுளை மனிதன் பார்க்கவேயில்லை. யார், மனதுக்குள் இருக்கும் கடவுளைப் பார்க்கிறானோ, அவன் கேட்பதை கடவுள்
கொடுக்கத்தான் செய்வார்…
(பின்குறிப்பு : இந்தக் கதை எனது மனைவி திருமதி. மணிமேகலை அவர்களால் எழுதப்பட்டது. மூலக்கதை சுவாமி சுகபோதானந்தாவினுடையது)
Comments
Post a Comment