அந்தக் காலம் Vs இந்தக் காலம் - பகுதி 7

கிருஷ்ணர் : நீ எந்த உலகத்தில் இருக்கிறாய் மேகலா... கண்டுபிடித்தது நேற்றைய விஞ்ஞானிதான்... Satellite-ஐ launch பண்ணியது இன்றைய காலத்தில்தானே.... விஞ்ஞானிகளின் சிந்திக்கும் திறன் எப்பவும் ஒரே மாதிரிதான். அதனால்தான், புராண காலத்திலிருந்தே புதிய கண்டுபிடிப்புகள் கண்டுபிடிக்கப்படுகிறது. இருந்தாலும்..., சாதனங்களும், சாதனைகளும் படைப்பதற்கு, காலங்களும் நமக்கு சாதகமாக இருக்க வேண்டாமா... ஏவுகலத்தை விண்ணில் தவழ விட்டது நேற்றைய விஞ்ஞானி என்றாலும், அது மிதக்க விடப்பட்டது..., இந்த 21-ம் நூற்றாண்டில்தானே.... அன்றிலிருந்து technology-யோட வளர்ச்சி அசுரத்தனமானது என்பதை நீ ஒத்துக் கொள்கிறாயா, இல்லையா.... 2G யில் ஆரம்பித்து, 3G, 4G...., இப்ப என்ன 5G-யும் வந்து விட்டதா.... விஞ்னானம் அசுரத்தனமாக வளர்வதற்கு இன்றைய காலம் தான் சாதகமாக உள்ளது.... உண்டா..., இல்லையா.... நேற்றைய தலைமுறையினர், இன்னும் 20 ஆண்டுகள் கழித்து நாம் பிறந்திருக்கலாமோ என்று ஏங்க வைக்கிறதா, இல்லையா.... பொய் சொல்லாமல் சொல்லு....

மேகலா : நீயும் ரொம்ப technical-ஆகத்தான் பேசுற கிருஷ்ணா.... இந்த technology இல்லாமல், நாங்கெல்லாம் வாழலியா கிருஷ்ணா....

கிருஷ்ணர் : இப்போ, அது முக்கியமில்லம்மா... அந்தக் காலத்து மனுஷி, இந்த technology இல்லாம உன்னால வாழ முடியுமா.... அதச் சொல்லு... சரி..., உனக்காக நான் கொஞ்சம் மாத்தி கேட்கிறேன்... இப்ப என்ன...., அந்தக் காலம் தான் ‘golden times' என்று சொல்ல வர்ற..., நான் அதை ஒத்துக்கணும்... இந்த technology-லாம் இல்லாத எளிமையான ஒரு துறையைச் சொல்லு.... என்னால ஒத்துக்க முடியுதா பார்க்கிறேன்....

மேகலா : கிருஷ்ணா...., எந்தத் துறையென்றாலும், அந்தக் காலம் தான் best என்கிறேன்.... நீ என்னடான்னா.... சரி...., நீ கேட்டதற்காக சொல்லுகிறேன்.... அந்தக் காலங்களில், ஏழையாக இருந்தாலும், விவசாயியாக இருப்பவன், காணி நிலமாவது சொந்தமாக வைத்திருப்பான். அந்த நிலத்தில், பத்து பன்னிரெண்டு தென்னை மரமும்...., வானம் பார்த்த பூமியென்றால், அங்கொண்ணும், இங்கொண்ணுமாக பனை மரம் வைத்திருப்பான்.... அதற்கு நடுவில் குடிசையைப் போட்டு, அந்த நிலத்தில் எது விளையுமோ, அதை விதைத்து, தானே வேலை பார்த்து எளிமையாக வாழ்வான்.... மாட்டுத் தொழுவம் ஒன்று வேய்ந்து, ரெண்டு மாடு வளர்ப்பான். அது தரும் பாலைக் கொண்டே, தன் தேவைகளைப் பூர்த்தி செய்வான்... இயற்கையை ஒட்டிய வாழ்க்கை... தன் பண்ணையத்தில் தேவையான வேலையைத் தானே செய்தல்..., இயற்கையான உரம்...., எதையும் எதிர்பாராத, பரபரப்பில்லாத, எளிமையான வாழ்க்கை.... அமைதியான சூழல்.... இந்த மாதிரியான வாழ்க்கை இந்தக் காலக்கட்டத்தில் எந்த விவசாயியிடமாவது, தேடினாலும் கிடைக்குமா கிருஷ்ணா.... விளைநிலம் இருக்கிறது.... விவசாயியும், modern equipments வைத்து, இருக்கிற நிலத்தில், அதிக விளைச்சலைத்தான் எதிர்பார்க்கிறான். செயற்கை உரம், பூச்சிக்கொல்லி மருந்து என்று இதிலேயும் அதிரடி நடவடிக்கை - fast விளைச்சல் என்று எல்லாவற்றிலும் செயற்கைத்தனம்.... இயற்கையை ஒட்டிய பண்ணை வாழ்க்கை கிடையாது.... ஏழையாக இருப்பவனிடம், காணி நிலமென்ன...., ஒரு சதுர அடி நிலம் கூட கைவசம் இருக்குமா... சந்தேகம் தான்.... அந்தக் காலங்களில், கையில் பணம் புரளாவிட்டாலும், மனத்திருப்தியோடு விவசாயி வாழ்ந்தான்... இன்று, எங்கே அந்த சொர்க்கம்.... நீயும் மாடு மேய்க்கும் சிறுவனாக வாழ்ந்தவன் தானே... நீயே சொல்லு....

கிருஷ்ணர் : நீ சொல்லுவதைப் பார்த்தால்..., விவசாயிகளெல்லாம் ஏழை விவசாயிகளாகவே இருக்க வேண்டுமா.... பசுமைப் புரட்சி பண்ணாமல், இத்தனை கோடி ஜனங்களுக்கு உணவு கொடுப்பது எப்படி....? இன்றைய விவசாயியிடம் மிகப் பெரிய பொறுப்பு கொடுக்கப்பட்டுள்ளது. விளைநிலங்கள் சுருங்கி வருகிறது..., மக்கள் பெருக்கமோ பெருகி வருகிறது.... காணி நிலம்..., இயற்கைச் சூழல்...., அமைதியான வாழ்க்கை என்பதைக் கடந்து, இயற்கையையே, ‘நெருக்கி நட்டால் அதிக மகசூல்’ என்ற வாசகத்திற்கு கட்டுப்பட வைக்க வேண்டி போராட வேண்டியிருக்கிறது.... நீயே சொல்லு, தக்காளி கிலோ பத்து ரூபாய் என்று சொன்னால் உனக்குப் பிடிக்குமா..., கிலோ 40 ரூபாய் என்றால் பிடிக்குமா.... அப்போ..., விவசாயத்தில் எத்தனை ஆராய்ச்சி செய்தால், சுருங்கி வரும் விளைநிலங்களில் அதிக மகசூல் காண முடியும்.... நீ போற்றும் முன்னாள் ஜனாதிபதி, டாக்டர் A. P. J. அப்துல் கலாம் என்ன சொன்னார்கள்... ‘இயற்கையை வெல்லுவது நம்மால் முடியாது.... ஆனால், இயற்கையை அனுசரித்து, உற்பத்தியைப் பெருக்க முடியும்’ என்று சொன்னாரா, இல்லையா.... தேவைகள் அதிகமாக இருக்கும் போது...., இன்றைய காலக்கட்டத்தில், விளைநிலங்களைத் தக்க வைத்து..., மக்களின் தேவைக்கு விளைய வைப்பதுதானே சொர்க்கம்... ஒரு விவசாயிக்கு அதுதானே திருப்தி.... இது காலத்தின் கட்டாயம்.... மனிதன், அசுர வளர்ச்சியை எங்கும், எதிலும் காண வேண்டி தினமும் போராடுகிறான். அமைதியான சூழலில்..., திருப்தியான வாழ்க்கை சொர்க்கம் தான். இருந்தாலும்...., வளர்ச்சிக்கான உழைப்பு..., சாதனையில் திருப்தி என்பதுதான் இன்றைக்கு நிஜமான சொர்க்கம்....

மேகலா : அப்போ...., organic காய்கறிகள், பழங்கள், இயற்கை உரம் இவையெல்லாம் தேவையில்லை என்கிறாயா கிருஷ்ணா....

கிருஷ்ணர் : இதற்கு நான் என்ன பதில் சொல்லணும் என்று நீ எதிர்பார்க்கிறாய்... ஒரு தவறு நடந்து முடிந்த பிறகு, அதற்கான விழிப்புணர்வும் கூடவே வருதா இல்லையா... அந்தக் காலங்களில் நாட்டு மாடுகள் தான், பாரத தேசத்தின் பால் கொடுக்கும் மாடுகளாக இருந்தன. அதன் பின், ‘சிந்து’, ‘ஜெர்ஸி’ என்று வெளிநாட்டுப் பசுக்கள் வந்தன. பால் நிறையக் கொடுக்குது என்றதும், பால்மாடு வைத்திருப்பவர்கள், ‘சிந்து’ பசு வளர்க்க ஆரம்பித்தனர்..., உன் அப்பா உட்பட.... இப்போ, ‘நாட்டு மாட்டுப்பால்’ என்று சொல்லி விற்பனை செய்யுமளவுக்கு பால் உற்பத்தியாளர்கள், ‘தங்கள் பாணி’யை மாற்றுகிறார்கள் என்றாலும், ‘சிந்து’ பசுவையும், ‘ஜெர்ஸி’ பசுவையும் விரட்டி விடவா முடியும்.... அது பாட்டுக்கு அது...., இது பாட்டுக்கு இது... அப்படித்தான்.... காலங்கடந்த விழிப்புணர்வு என்றாலும்..., organic காய்கறிகள் மீது இன்றைய தலைமுறையினருக்கு விழிப்புணர்வு வருவது நல்லதுதானே.... என்றாலும், பத்து ரூபாய் தக்காளியை விளைய வைக்க வேண்டிய விவசாயி, செயற்கை உரங்களையும், இயற்கை உரங்களையும் mix பண்ணி விளைய வைக்கத்தான் முனைவான்....

மேகலா : ஏன் கிருஷ்ணா..., கிராமம்...., விவசாயம்...., எளிமை...., இதெல்லாம் ஒன்றுக்கொன்று சம்பந்தப்பட்டதுதானே. இதற்குள் செயற்கை உரங்கள், hybrid காய்கறிகள் வருவது நல்லதா கிருஷ்ணா.... ‘கிராம ராஜ்ஜியம்’தான், ‘ராம ராஜ்ஜியம்’ என்று மகாத்மா காந்தி சொல்லியிருக்காரே..

(தொடரும்)

Comments

Popular posts from this blog

மனம் மிக அலை பாயுதே....

Mental Ability..... are we slowly losing....?

Is it humanly possible....?