அந்தக் காலம் Vs இந்தக் காலம் - பகுதி 8

கிருஷ்ணர் : ‘கிராம ராஜ்ஜியம்’ என்றால் எப்படி....? இப்ப இருக்கிற சென்னை, மதுரை, திருச்சி, பெங்களூர், மும்பை, டெல்லி என்ற நகர்ப்புறங்களை கிராமமாக மாற்றணும் என்கிறாயா... மகாத்மா காந்தி, ‘கிராம ராஜ்ஜியம்’ தான் ‘ராம ராஜ்ஜியம்’ என்று சொன்னார் என்றால், அது அவருடைய கற்பனை.... கற்பனையெல்லாம் நிஜமாக முடியாது. முதலில் விவசாயி, எளிமையாகத்தான் இருக்கணும் என்ற உன் வாதமே தப்பு.... விவசாயியை சுதந்திரமாக இருக்க விடுங்கள். இன்றைய விவசாயிகள், தங்கள் விவசாயத்தை உற்சாகத்துடன் செய்ய வேண்டும்.... இன்றைய காலத்திலும், இனி வரும் காலத்திலும், விவசாயிகள் நின்று ஜெயிக்க வேண்டும்.... விளைய வைப்பதற்கு விவசாயி முன்வந்தால்தானே, விளைச்சலைப் பார்க்க முடியும்... Artificial உணவையா சாப்பிட முடியும்....? விவசாயத்தில், அந்தக் காலம் பொன் மயமானதா..., இல்லை, இந்தக் காலமா என்றால்..., நான் சொல்லுவேன்...., இந்தக் காலம் புத்திசாலித்தனமானது என்று...

மேகலா : நீ ஏதோ என்னை வெறுப்பேற்றுவதற்காக பேசுவது போல இருக்கு கிருஷ்ணா...

கிருஷ்ணர் : உண்மை நிலவரத்தைச் சொல்லுகிறேன்..., நீ வெறுப்பேற்றுவதாகச் சொல்லுகிறாய்... சரி..., நீ சந்தோஷமாய் அனுபவித்த பண்டிகைகளைப் பற்றிச் சொல்லு.... நீ எத்தனையோ முறை சொல்லக் கேட்டிருக்கிறேன்..., தைப் பொங்கலும், பங்குனிப் பொங்கலும், அந்தக் காலங்களில் உறவுகள் புடைசூழ நீ கொண்டாடிய விதத்தைச் சொல்லு.... ‘இந்தக் காலம்’, அந்த சந்தோஷத்தைக் கொண்டாடுகிறதா, பார்க்கலாம்....

மேகலா : ஆமாம் கிருஷ்ணா.... தைப்பொங்கலன்று, எங்கள் வீட்டில்...., எங்க ஐயாமா முதல், எங்க அப்பாவோட அக்கா, தம்பி என்று அத்தனை பேரும் எங்கள் வீட்டில் கூடி விடுவார்கள். எங்கள் வீட்டின் பின்புறத்தில், வானம் பார்த்த வெட்ட வெளியில், பனி சிந்தும் இளம் காலையில், சூரியன் கூட சோம்பலாய் கதிர்களைப் பரப்பும் வேளையில், பொங்கல் வைப்பதற்கான instant அடுப்பை ரெடி பண்ணுவோம்.... தரையில் ஆத்து மணலைப் பரப்பி, அதன் மீது மூன்று கல் வைத்து, அதன் மீது தங்கமாய் மின்னும் பொங்கப் பானையை, புத்தாடை அணிந்த, எங்க அம்மாவும், அப்பாவும் சேர்ந்து எடுத்து வைப்பார்கள்.... எங்க அம்மா, பொங்கலுக்கான பச்சரிசியைக் கழுவி, அந்தக் கழுநீரை பொங்கப் பானையில் ஊற்றுவார்கள். அடுப்பிற்குத் தீ மூட்டி, பொங்கலைப் பொங்க வைப்பார்கள். பொங்கி வழியும் போது, சுற்றி அமர்ந்திருக்கும் நாங்கள், கை தட்டி ஆரவாரம் செய்து, சூரியனுக்கு வணக்கம் செலுத்துவோம்....

கிருஷ்ணர் : ஏன் ‘குலவை’ குரல் கொடுக்க மாட்டீர்களா....

மேகலா : எங்களுக்குத் தெரியாது கிருஷ்ணா....

கிருஷ்ணர் : ஓஹ்....ஹோ.... சரி, continue....

மேகலா : பொங்கல் வைத்து இறக்கியதும்...., எல்லோரும் ஒண்ணாக அமர்ந்து, பொங்கல் சாப்பிட்டு...., மதிய உணவு முடிந்ததும், மத்தியானம், ‘சினிமா’ கிளம்புவோம்.... அது ஒரு golden காலம் கிருஷ்ணா... இப்பல்லாம் யாரும் பொங்கப் பானையில் பொங்கல் வைப்பதில்லை.... அதுவும், சூரியப் பொங்கல் என்பதே கிடையாது....

கிருஷ்ணர் : சரி...., மேலே சொல்லு....

மேகலா : பொங்கலன்று, பொங்கல் வைத்தவுடன், எங்க வீட்டு மாடுகளுக்கு பொங்கலைக் கொடுக்கச் செல்வேன். அது வாழையிலையோடு பொங்கலை இழுத்துச் சாப்பிடும் அழகை ரசிப்பேன். மறுநாள் மாட்டுப் பொங்கலன்று, எங்கள் தோட்டத்திற்குச் செல்வோம். செல்லும் வழிதோறும் எதிர்படும் கிராமங்களில், தலையில் கட்டிய தலைப்பாகையுடன் இளைஞர்கள், சைக்கிள் ரேஸில் கலந்து கொண்டு உற்சாகமாய் விளையாடுவதைப் பார்த்திருக்கிறோம்.

கிருஷ்ணர் : வாடிவாசல் திறக்கப்பட்டு, திமிறி ஓடி வரும் காளைகளை அடக்கும் வீரவிளையாட்டை நீ பார்த்ததில்லையா....

மேகலா : அது அலங்காநல்லூரில் தான் நடக்கும் கிருஷ்ணா. எங்க ஊர்ப்பக்கமெல்லாம்...., கிராமங்களில் ஊர் மக்கள் அனைவரும் ஒன்று திரண்டு, சைக்கிள் ரேஸ், மற்ற விளையாட்டுக்கள் நடக்கும். கோயம்பத்தூர், பொள்ளாச்சி பக்கமெல்லாம், ரேக்ளா ரேஸ் நடக்கும் கிருஷ்ணா.... தமிழ்நாடு முழுக்க திருவிழாக் கோலம் தான் கிருஷ்ணா. இந்த தைப்பொங்கலும், மாட்டுப்பொங்கலும் உழவர்களின் திருநாளாகக் கொண்டாடப்பட்டது என்பது போய்...., இன்று ஏதோ தமிழர்களுக்கு மட்டுமே தெரிந்த தமிழர் திருநாளாகக் கொண்டாடப்படுகிறது கிருஷ்ணா... நம்ம பாரத நாடு இப்போ, பல தொழில்களிலும் கால் பதித்து, தங்கள் வலிமையைக் காட்டுகிறார்கள். ஆனால், நதிவளம் நிறைந்த நம்ம நாடு விவசாயம் சார்ந்த நாடு. சூரியனுடைய கதிர்கள், வெப்பம் குறைந்து வெளிச்சமாய் பரவும் தை முதல்நாள், இந்தியா முழுக்க அறுவடைக் காலம் என்பதால், அன்றைய தினம், சூரியனுக்கு நன்றி சொல்லும் விதமாக..., உறவுகள் அனைவரும், வீட்டின் வெளிமுற்றத்தில், சூரியனுக்குப் பொங்கல் வைத்து, ‘பொங்கலோ, பொங்கல்’ என்று உற்சாகமாகக் குரல் எழுப்பி மகிழ்வார்கள். தன் நிலத்தில் விளைந்த பச்சைக் காய்கறிகளை, சூரியனுக்குப் படைத்து, நன்றி சொல்லி வணங்கும் ‘உழவர் திருநாளை’, ‘தமிழர் திருநாளாகக்’ கொண்டாடுவது மட்டுமல்ல கிருஷ்ணா...., பொங்கல் பானையில், பொங்கல் வைப்பது போய், குக்கரில் பொங்கல் வைக்கிறார்கள்....

கிருஷ்ணர் : அம்மா...., நீங்க எப்படி.....

மேகலா : நான், என் குட்டிப் பொங்கல் பானையில்தான் பொங்கல் வைப்பேன் கிருஷ்ணா.... தங்கள் காளை மாடுகளுக்கெல்லாம் கொம்பில் வர்ணம் பூசி, மாலையிட்டு குதூகலித்த அந்தக் கால சந்தோஷம் பெருசா...., தமிழர் திருநாள் என்று சொல்லிக் கொண்டு, எல்லா விடுமுறை நாள் போலேயும், இந்த விடுமுறை நாளையும், ‘பாப்பையா’வோட பட்டிமன்றத்தோடு வழக்கமான ஜாலியில் கொண்டாடுவது பெருசா..... நீயே சொல்லு.....

(தொடரும்)

Comments

Popular posts from this blog

மனம் மிக அலை பாயுதே....

Mental Ability..... are we slowly losing....?

Is it humanly possible....?