அந்தக் காலம் Vs இந்தக் காலம் - பகுதி 11 (நிறைவுப் பகுதி)
மேகலா : வெளிநாட்டிற்குச் சென்று வேலை பார்க்கும் bachelors, சமையல் செய்யத் தெரியாத, புதுசா கல்யாணம் பண்ணிய சின்னப்பொண்ணுங்கள் என்று இவர்களுக்குக் கற்றுக் கொடுப்பதற்காக ஆரம்பித்தோம் கிருஷ்ணா.... இன்று பத்து ஆண்டுகள் நிறைவு பெற்றது கிருஷ்ணா....
கிருஷ்ணர் : Oh....! முதலில், பத்து ஆண்டுகளாகும் இந்த service-க்கு வாழ்த்துக்கள். பத்து ஆண்டுகளுக்கு முன்னயே, அதுவும் சென்ற தலைமுறையைச் சேர்ந்த நீ, online மூலமாக சமையல் கற்றுக் கொடுக்கத் தொடங்கி விட்டாய். பெண்கள் வீட்டிலிருந்தபடியே சம்பாதிக்கலாம் என்று ஒரு சாரார் online shopping-ஐயும், online teaching-ஐயும் பாராட்டிக் கொண்டிருக்கும் போது உனக்கு மட்டும் குற்றமாகத் தெரிகிறதா.... ஒண்ணு நல்லா புரிஞ்சிக்கோ.... மக்கள் தொகை பெருகி வரும் இந்தக் காலத்தில், traffic நெருக்கடி’...., இல்லையில்லை jam ஆகி, இன்னும் மோசமாகி விடுமோ என்ற சூழ்நிலையில், அதற்கான ஒரு சின்ன solution தான் இந்த வசதி.... Online வசதிகளெல்லாம் காலத்தின் கட்டாயம்....
மேகலா : ஏன் கிருஷ்ணா.... அந்தக் காலங்களில் நாங்கள் எவ்வளவு சந்தோஷமாக வாழ்ந்தோம்.... அதெல்லாம் உனக்குத் தெரியவே தெரியாதா....
கிருஷ்ணர் : இப்போ matter...., நீ சந்தோஷமாய் வாழ்ந்தாயா என்பதில் கிடையாது.... பொற்காலம் அந்தக் காலமா, இந்தக் காலமா என்பதில்தான்....
மேகலா : அப்போ...., அந்தக் காலங்களில் புதையலாய் கண்டுபிடிக்கப்பட்ட விஞ்ஞானம்.... தேடிச் சென்று தெரிந்து கொண்ட வளங்கள்.... சோதனை முயற்சியால் வெற்றி பெற்ற சாதனைகள்.... இயற்கையோடு இசைந்த வாழ்க்கை வீர விளையாட்டுக்கள்.... சுற்றுப்புறங்கள் மாசு படாத நகர வாழ்க்கை... இலக்கியம்.... இசை.... சுவைமிக்க ஆரோக்கிய உணவு.... இயற்கை விவசாயம்.... வெள்ளந்தியான பக்தி..., என்று எதை எடுத்தாலும், அனுபவித்துப் பார்க்கக் கூடிய சுவையான சம்பவங்கள்...., இதெல்லாம் ஆனந்தமயமானது இல்லையா கிருஷ்ணா.... இந்த ஆனந்த காலம் பொற்காலம் இல்லை என்பாயா....
கிருஷ்ணர் : அப்படீன்னு யார் சொன்னது.... உன்னை ஒன்று கெட்கிறேன். கங்கை மாதா, மேலுலகத்திலிருந்து பூலோகத்திற்கு வரும் போது...., இறையனாரிடம் ஒரு வரம் கேட்கிறாள். ‘நான் பூமியில் பரவும் போது, கங்கையில் குளிப்பவர்கள் அனைவரும் ‘பாவம்’ நீங்கியவர்களாவார்கள் என்ற வரம் வேண்டும்’ - என்கிறாள். இறையனாரும், அந்த வரத்தைக் கொடுக்கிறார். ‘மேலுலக கங்கை’, ‘பூலோக கங்கை’யாகி, ‘பிந்துசரஸ்’ என்னும் நீர்நிலையில், அருவியாகக் குதித்து வருகிறாள். அப்புறம், 7 நதிகளாகப் பிரிந்து, பாரதம் முழுக்க பரவுகிறாள். அப்பொழுது, எல்லா மக்களும் அந்த நதியில் முழுகி, தன் பாவம் நீங்கப் பெறுகிறார்கள்.... இன்றும், கங்கை, பாரதத்தில் பெருக்கெடுத்து ஓடுகிறாள். நீயும் காசிக்குச் சென்ற போது, கங்கையில் முழுகி வந்தேன் என்றாய். அந்த கங்கை, முதன் முதலில், மேலுலகத்திலிருந்து வந்த கங்கையாகவா இன்றும் தேங்கி நிற்கிறாள்...? நதி வெள்ளம், கரை புரண்டு ஓட வேண்டும்... அடுத்தடுத்து, புது வெள்ளமாய் பெருக்கெடுத்து ஓடினால்தானே, புத்தம் புது நீர் சுவையாக பருக முடியும்.... ‘காலம்’ என்பது புது வெள்ளம் மாதிரி... அதற்கு, அந்தக் காலம்..., இந்தக் காலம் என்பதெல்லாம் கிடையாது.... அது பாட்டுக்கு பல சம்பவங்களைக் கடந்து ஓடிக் கொண்டே இருக்கும்.... இன்னும் ஒரு விஷயம்.... உன் அம்மா, அப்பா இல்லாமல் நீயில்லை என்பதை நீ நம்புகிறாயா.... அப்படித்தான், உன் அம்மாவும், அப்பாவும், அவர்களுடைய அம்மா, அப்பா இல்லாமல் பிறக்கவும் முடியாது, வளரவும் முடியாது.... அந்தக் காலம் இல்லாமல், இந்தக் காலம் கிடையவே கிடையாது. நேற்றைய அறிவு என்பது, இன்றைய வளர்ச்சி... இன்னும் சொல்லப் போனால், சென்ற தலைமுறையினர்தான் இன்றைய தலைமுறையினரின் அஸ்திவாரம் என்றே சொல்வேன்... உன் ஐயாப்பா கட்டியது உறுதியான அஸ்திவாரம் என்றால்..., இன்றைய இஞ்ஜினியர் கட்டுவது, அதன் மேல் கட்டப்படும் கட்டடம்... தாமஸ் ஆல்வா எடிசன் இல்லாமல், இன்றைய Philips-ன் புதுப்புது designs பல்புகள் இல்லை.... நேற்று பாதை கண்டுபிடித்ததால்தான் இன்று road போட முடிகிறது.... என்றாலும், நாம் வாழ்வது இன்றைய உலகத்தில்... இன்னும் சிறிது காலங்களில் இதுவும் நேற்றைய உலகமாகப் போகிறது. இன்றைக்கு பொறுப்பில் உள்ளவர்கள், சென்ற தலைமுறையாகப் போகிறார்கள்.... இன்னும் சுகமாக வாழ்வதற்கு பல சாதனங்கள் வரப்போகிறது..... கார்த்தி..., ஆதி, எல்லோரும்..., ஹரியை சென்ற தலைமுறையினர் என்று சொல்லும் காலம் வரும்... அப்போ..., நீ சொல்லும் சோம்பேறி technology காலம்...., பொற்காலமாகப் பார்க்கப்படும்... அதுதான் உலகம்... ஒரு அரசாங்கம் கொடுக்கும் அரசியல் நிர்வாக முறையை வைத்துத்தான் அவர்களுடைய ஆட்சிமுறை, பொற்காலம் அல்லது இருண்ட காலம் என்று வரலாற்று ஆசிரியர்கள் குறிப்பிடுகிறார்கள். ஆனால், இது வேறு. உன்னைப் போல உலகில் நடக்கும் எல்லாவற்றையும் அசை போட்டுப் பார்க்கும் பார்வையாளர்கள், நேற்று நல்லாயிருந்தது; நேற்றுப் போல் இன்று இல்லை என்று பேசுவதெல்லாம், ச்சும்மா தன்னுடைய குழந்தைப் பருவத்து சந்தோஷத்தை மட்டுமே சந்தோஷம் என்று ஒருதலைப்பட்சமாகப் பார்ப்பதால் வரும் வாதம்... உன்னை ஒன்று கேட்கிறேன்.... கார்த்தி, ஆதி, சந்தியாவை விட்டு விட்டு, உன் அம்மா, அப்பா, ஐயாப்பா காலத்திற்குள் மறுபடியும் உன்னைப் போகச் சொன்னால் போக முடியுமா.... மனிதன், தன் கையில் கிடைத்த வசதிகள், சந்தோஷங்களை இழப்பதற்கு என்றுமே தயாராக மாட்டான். நேற்றைய காலம் நிச்சயம் சந்தோஷம் தான்... வாழ்ந்து பார்த்தவள் நீ சொல்லுகிறாய்.... இன்றைய காலமும் பொற்காலம் தான்.... இன்றைய தலைமுறையினரும் அதைத்தான் சொல்கின்றனர். இனி வரப் போகும் காலங்களும் வசதிகள் நிறைந்தது தான். நம்பிக்கை கொண்டவருக்கு மட்டும் தான் சந்தோஷம் நிச்சயம். இன்னும் சொல்லப் போனால், வாழத் தயாரானவர்களுக்கு மட்டுமே, வாழ்க்கை சொர்க்கமாகும்... உனக்கு இத்தனை விளக்கமாக சொல்லணும்கிறது கிடையாது....
மேகலா : ஆதி பரப்பிரம்மமே.... அண்ட சராசரத்தில் எத்தனையோ பேரை நீ பார்த்திருக்கிறாய்... நல்லவர்கள், வல்லவர்கள், கெட்டிக்காரன், புத்திசாலி...., முனிவர்கள், சித்தர்கள், இன்னும் மகாபாரதம் எழுதிய வியாசர்...., நண்பனாய் பழகிய அர்ஜுனன் என்று பல மனிதர்களைப் பார்த்திருக்கிறாய். மனிதனின் பல போராட்டங்கள்..., கண்டுபிடிப்புகள்..., வெற்றிகள் என்று உலக அதிசயங்கள் அனைத்தையும் பார்த்திருக்கிறாய்.... இருந்தாலும், நேற்றைய கண்டுபிடிப்பிலிருந்து, முன்னோர்களின் போராட்டத்திலிருந்து வளரும் வளர்ச்சியே உண்மையான வளர்ச்சி என்று ‘பாப்பையா’ மாதிரி தீர்ப்பு சொல்லி என்னை விளங்க வைத்தாய்... ஆம்..., காலம் என்பது வாய்ப்புக்கள் நிறைந்தது.... வாழத் தெரிந்தவர்களுக்கு, எக்காலமும் பொற்காலமே... நன்றி..., நன்றி...., கிருஷ்ணா....
கிருஷ்ணர் : யப்பா.... இப்பவாவது புரிந்ததே...., வர்ட்டா.....
(நிறைவு பெற்றது)
Comments
Post a Comment