அந்தக் காலம் Vs இந்தக் காலம் - பகுதி 9
கிருஷ்ணர் : உன் அம்மாவும், அப்பாவும், பொங்கல் பானையை எடுத்து, அடுப்பில் வைப்பதிலிருந்து, உறவுகளோடு நீங்கள் கொண்டாடிய தைப்பொங்கலை, அந்தக் காலத்துக் குதூகலத்தோடு நீ சொன்ன போது, நீ எவ்வளவு அனுபவித்திருக்கிறாய் என்பது புரிகிறது. இந்தக் காலத்தில் நம்ம பாரதம், பலவித தொழில்களில் சாதனை புரிந்து வருகிறது என்றும் சொல்லியிருக்கிறாய். இன்றைய மக்களும் பொங்கலைக் கொண்டாடுகிறார்கள்.... ஆனால், தமிழர் திருநாளாக என்று அடையாளப்படுத்துகிறார்கள் என்று ஆதங்கப்படுகிறாய். ஒன்று நீ நன்றாகப் புரிந்து கொள்ள வேண்டும். விவசாயம் சார்ந்த பண்டிகையோ, தொழில் சார்ந்த, அதாவது, ‘ஆயுத பூஜை’ பண்டிகையோ, எல்லா தரப்பு மக்களும் அதைக் கொண்டாடி மகிழவே விரும்புகிறார்கள். நீ பல உறவுகளோடு கொண்டாடிய தைப்பொங்கல்...., இன்று, தங்கள் தங்கள் உறவுகளோடு கொண்டாடுகிறார்கள்.... ‘நாங்களெல்லாம் சூரியப் பொங்கல் வைத்தோம்’ என்கிறாய்... Apartment-ல் வசிக்கும் ஹரி என்ன செய்வான்.... மதனாவோடு தானும் கரண்டி பிடித்து, குக்கரில் பொங்கல் வைத்து, குடும்பமாய் அமர்ந்து உண்பதை ‘மகிழ்ச்சி’ என்கிறான்.... பண்டிகைக் காலத்தில், ‘மகிழ்ச்சி’தானே முக்கியம்... சில வருடங்களுக்கு முன்பாக, மாட்டுப்பொங்கலன்று நடக்கும் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டுக்கு court-ல் தடையுத்தரவு போட்டிருந்தார்கள். இந்த ஜல்லிக்கட்டு நம்மோட பாரதத்தின் வீர விளையாட்டு. தமிழ்நாட்டில் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு உலகப் பிரசித்தம்.... இதை நடத்தக் கோரி, விவசாயிகள் மட்டுமா போராடினார்கள்...., I. T - யில் வேலை பார்க்கும் இளைஞர்கள் கூட மொத்த பேரும் மெரீனா பீச்சில் குழுமி, ‘அறப் போராட்டமாக’ தங்கள் எதிர்ப்பை அமைதியாகக் காட்டவில்லையா.... இந்த group எப்படி சேர்ந்தது.... ‘Whatsapp' என்று சொல்லப்படும் இன்றைய தகவல் communication மூலமாக.... வேறு வழியில்லாமல், court ஜல்லிக்கட்டு நடப்பதற்கு அனுமதி கொடுத்ததா இல்லையா.... அப்போ...., இந்தக் காலத்தில் பாரம்பரியம் அழியாமல் பண்டிகைகள் நடத்தப்பட வேண்டும்..., இது நம்ம கலாச்சாரம் என்ற அக்கறை இன்றைய தலைமுறையினருக்கும் இருக்கா, இல்லையா.... அந்தந்த துறையில் இருப்பவர்கள், அவரவர் பாணியில் பொங்கலிடுகிறார்கள். ‘சூரியன்’ எல்லோருடைய வணக்கத்தையும் ஏற்றுக் கொள்ளத்தான் செய்வான். ‘தமிழர் திருநாளாக’ அடையாளப்படுத்துவது..., அரசாங்கத்தின் கைங்கரியம்... மக்கள் லேசுக்குள் தங்கள் பரம்பரை வாசனையை விட்டுக் கொடுக்க மாட்டார்கள். தைப்பொங்கலன்று நீ சினிமா போனாய் என்று, இன்றும் அதே மாதிரி தியேட்டருக்குத்தான் போகணுமா... மகிழ்ச்சியைத் தேடி நீ அந்தக் காலத்துக்குப் போகணுமின்னு அவசியமில்லை... இந்தக் காலத்து குக்கர் பொங்கலும் சுவையாகத்தான் இருக்கிறது... நீ அந்தக் காலத்து மனுஷி..., பொங்கல் பொங்கி வரும் போது ஏன் குலவையிடவில்லை...? ஏன்னா..., அந்தக் காலத்து modern பொண்ணு நீ. குலவையை ஒதுக்கி, கை தட்டி ஆரவாரம் செய்து பொங்கலை ரசிக்கிறாய்... அது மாதிரிதான் இன்றைய இளந்தலைமுறை... புத்தாடை அணிந்து, சூரியனுக்கு காய்கறிகள், கிழங்குகள் படைத்து, குக்கர் பொங்கலைப் படைத்து வழிபடுகின்றனர். இங்கு சந்தோஷம் எங்கே miss ஆகிறது... சந்தோஷத்திற்கு நிறைய option இருக்கு... தியேட்டருக்கும் போகலாம்... T. V - யில் பாப்பையா பட்டிமன்றம் பார்க்கலாம்....
மேகலா : பண்டிகைக் காலங்களில், இன்றைய காலத்தில் சந்தோஷத்திற்குக் குறைவில்லை என்பதை நான் ஒத்துக் கொள்ளவே மாட்டேன் கிருஷ்ணா...
கிருஷ்ணர் : அதானே பார்த்தேன்... எங்க நீ... positive-ஆக பேசப் போகிறாயோ என்று பார்த்தேன்... சரி..., எந்த வகையில் சந்தோஷத்தை நீ பார்த்து விட்டாய்.... இந்தத் தலைமுறையினர் பார்க்கவில்லை....
மேகலா : கிருஷ்ணா..., நாங்களெல்லாம், பண்டிகைக் காலங்களில் எங்களோட மனதுக்குப் பிடித்தவர்களுக்கு..., உறவினர்களுக்கு வாழ்த்து சொல்லுவதற்கு, பண்டிகையின் சந்தோஷத்தை அதிகப்படுத்தும் விதமாக வாழ்த்து அட்டைகள் அனுப்புவோம் கிருஷ்ணா. புதுவருஷப் பிறப்பு, தீபாவளி, தைப்பொங்கல் என்று ஒவ்வொரு பண்டிகைக்கும், postman வாழ்த்து அட்டைகளை சுமந்து வந்தே இளைத்து விடுவார்... ஒவ்வொருவருக்கும் எத்தனை வாழ்த்துகள் வந்திருக்கின்றன என்று எண்ணிப் பார்ப்பதே ஒரு சுகம் கிருஷ்ணா.... சில வாழ்த்து அட்டைகளை open பண்ணியதும், பிறந்த நாளானால் பாட்டுப் படிக்கும்..., சில வாழ்த்து அட்டைகள் வாசம் வீசும்..., சில கவிதைகள் கண்ணீரை வரவழைக்கும். வாழ்த்து அட்டைகளின் கட்டிங்ஸ்கள் நம்மை பிரமிக்க வைக்கும். எத்தனை அற்புதமான காலம் கிருஷ்ணா.... இந்த மாதிரி கவிதையைச் சுமந்து வரும் வாழ்த்து அட்டைகளுக்கே, ‘end card' கொடுத்தது இந்தக் காலம்....
கிருஷ்ணர் : உனக்கு என்ன இப்போ.... கவிதையாக வாழ்த்து வரணும்..., அவ்வளவுதானே... Greetings app-ஐத் தட்டினால், எத்தனை கவிதை வேணுமோ..., அத்தனையையும் message ஆக, உன் பிறந்த நாளுக்கு வாழ்த்துக்களை அனுப்பச் சொல்லவா... பிறந்த நாளுக்கு, தீபாவளிக்கு, தைப்பொங்கலுக்கு, ஆயுத பூஜைக்கு, இன்னும் அம்மா day..., அப்பா day...., அண்ணா day..., அக்கா day..., என்று எல்லாவற்றிற்கும் வாழ்த்துகள் வருதே... நீ கூட, whatsapp-ல message அனுப்பறயே..., நானும் பார்க்கத்தானே செய்கிறேன்... நீ வாழ்த்து அட்டையை, post office-க்குச் சென்று post பண்ணணும்..., ஆனால், இப்போ, தைப்பொங்கல் பொங்கி வழிவதை photo எடுத்து உடனே சுடச் சுட பொங்கல் வாழ்த்து சொல்கிறார்கள்.... கார்த்தியும், ஆதியும் ‘Happy Diwali' என்று video-வில் குரல் கொடுத்து வாழ்த்து சொல்லுகிறார்களே..., இதை விடவா உன் வாழ்த்து அட்டை கவிதை உயிர்ப்புடன் இருக்கிறது.... சரி..., அந்தக் காலங்களில், வாழ்த்து அட்டைகள் பண்டிகைகளின் சந்தோஷங்களை பல மடங்காக்கியது என்கிறாயே.... அப்போ..., இன்று..., இந்தத் தருணமே..., immediate-ஆக வாழ்த்துக்களை அள்ளித் தரும் இந்தக் காலம் எவ்ளோ சந்தோஷமானது.... உங்களோட வாழ்த்து அட்டைகள் வருவதற்கு காத்திருக்கணும்.... ஆனால், உலகின் எந்த மூலைக்கும், ஒரு நொடிக்குள் வாழ்த்துக்களை அனுப்ப முடியும் இந்தக் காலம் தான் மகிழ்ச்சியானது என்று உன் மனசு கூட சொல்வது என் காதுக்குக் கேட்கிறது....
மேகலா : இல்ல கிருஷ்ணா நான் அப்படிச் சொல்லல...
கிருஷ்ணர் : சரி.... நீ..., பிடிவாதக்காரி.... உன் வாதத்தைத் தொடரலாம்....
(தொடரும்)
Comments
Post a Comment