மனம் மிக அலை பாயுதே....
மகாபாரதத்தில், கதையை நகர்த்துவதற்கு பெரிதும் உதவிய ஒரு கதாபாத்திரம் ‘திருதராஷ்டிரன்’. மிக முக்கியமான முடிவுகள் அவன் மூலமாகவே எடுக்கப்படுகின்றன; ஏனென்றால் அவன் அஸ்தினாபுரத்து அரசன்.... திருதராஷ்டிரனை, ’நல்லவன்’ என்பதா, இல்லை ‘கெட்டவன்’ என்பதா? முரண்பாடுகளின் மொத்த உருவம் தான் அவன் (He is a bundle of contradictions). நல்ல எண்ணங்கள் அவ்வப்போது வந்து போகும் ஒரு கெட்ட எண்ணம் படைத்தவன். ஒரு பக்கம் அவனது மனசாட்சி போன்று விளங்கும் அவன் சகோதரன் ‘விதுரன்’; மறுபக்கம் தீய எண்ணங்களின் மொத்த உருவமான அவனது மகன் ’துரியோதனன்’. விதுரன் கூறும் அறிவுரைகளை விரும்பிக் கேட்டும், அதன்படி நடக்க முடியாமல், துரியோதனன் மீதுள்ள அதீத பாசத்தினால், கெட்ட செயல்களுக்கு அனுமதி கொடுத்தவன். ஒரு கடிகாரத்தின் ‘ஊசல்’ (pendulum) போன்றவன். ஆனால், எப்போதும், துரியோதனன் பக்கம் மட்டுமே சாய்பவன். அவன் நினைத்திருந்தால், ‘சூதாட்டம்’ நடக்காமல் தடுத்திருக்கலாம். அதன் விளைவாக பாண்டவர்கள் 13 வருடங்கள் ‘வனவாசம்’ சென்றதைத் தவிர்த்திருக்கலாம். பாண்டவர்கள் வனவாசம் முடிந்து திரும்பியவுடன், அவர்களுக்குச் சேர வேண்டிய பங்கினைக் கொடுத்திருந்தால...